PARENTING 2017

PARENTING

“75 சதவீதமான பள்ளி குழந்தைகள் தினமும் தேவைப்படும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதில்லை”

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் 14/10/2017 சனிக்கிழமை அன்று பெற்றோரியல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர் கு. சிவராமன், பத்திரிக்கையாளர் ஞாநி, வாழ்க்கைத்திறன் பயிற்றுநர் ஏ.எஸ். பத்மாவதி அவர்கள் கலந்து கொண்டு பேசினர். மருத்துவர் கு. சிவராமன் பேசியதாவது, உணவு குறித்து நாம் தெரிந்து வைத்திருக்கும் தகவல்கள் எல்லாம் முன்னோர்கள் வழி வழியாகவே நம்மிடம் வந்திருக்கிறது. மற்ற நாடுகளை விட அதிக சத்து நிறைந்த உணவு நம் நாட்டு உணவு என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சிவப்பரிசி சோறும் சிறுதானியங்களும் உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம். நம் நாட்டு இட்லி மிக சிறந்த காலை உணவாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தவறான உணவுப் பழக்கத்தால், அனீமியா, இரும்புசத்து குறைபாடு மட்டுமல்ல... சிந்திக்கும் திறனுக்கும் உணவுப் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டு. நாம் யோசித்து பார்க்காத பிரச்சனைகள் கூட ஏற்படலாம். நம்நாட்டில் 75 சதவீதமான பள்ளி குழந்தைகள் தினமும் தேவைப்படும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதில்லை என்று யுனிசெப் ஆய்வு தெரிவிக்கிறது. இதில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கீரைகள், காய்கறிகள், பழங்கள் உண்பதை குழந்தைகளின் ஆறு மாதத்தில் இருந்தே பழக்கப்படுத்த வேண்டும். சாக்லேட், டப்பாகளில் குளிர்ச்சி ஊட்டப்பட்டப் பழச்சுவை நிறைந்த ரசம் போன்றவைகளில் அதிக அளவு இரசாயன உப்பும் சக்கரையும் கலக்கப்பட்டுள்ளதால் அவை உடலுக்கு கேடுகள் விளைவிக்கின்றன. மணமூட்டி நிறமூட்டி அதிகம் சேர்க்கப்படும் தின்பண்டங்கள், உணவு வகைகள் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வகை தின்பண்டங்கள் சிறிது சிறிதாக நம்மை கொல்லும். சீரகம், பூண்டு, வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் புற்று நோயை தவிர்க்கலாம். தேசிய உணவுக் கழகம் ஆய்வின் படி பளபளப்பான பழங்களைத் தவிர்த்து, நம் நாட்டு கொய்யா, நெல்லி, அத்திப்பழம் போன்றவற்றையும் பேரிட்சையையும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவையே உட்கொள்ளுதல் வேண்டும். உணவு என்பது ருசிக்கானது மட்டுமல்ல. பண்பாடும் காலச்சாரம் சார்ந்தும் ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்கிறது. சரியான உணவை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தி வளரும் தலைமுறையை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்குங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையே வீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும். நிகழ்வில் ஏ.எஸ். பத்மாவதி அவர்களின், சிந்தனை செய் மனமே என்ற வாழ்க்கைத்திறன் புத்தகம் வெளியிடப்பட்டது. பத்திரிக்கையாளர் ஞாநி, மருத்துவர் கு. சிவராமன், வாழ்க்கைத் திறன் பயிற்றுநர் ஏ.எஸ். பத்மாவதி, SRV. பள்ளி பொருளா் S.செல்வராஜன், முதல்வா் .க.துளசிதாசன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியா்கள் கலந்துக்கொண்டனா்.

Login


Visitors Counter