READ TRICHY 2017

திருச்சியே வாசி 2017

“வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்!” “வீட்டுக்கு ஒரு நூலகம்” “திருச்சியே வாசி”

வீட்டுக்கு ஒரு நூலகம் என்னும் முழக்கத்துடன், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவ மாணவிகள் மேற்கொண்ட திருச்சியே வாசி’ என்னும் வாசிப்பு இயக்கத்தை கவிஞர் நந்தலாலா அவர்கள் தொடங்கி வைத்தார். திருச்சி உழவர் சந்தையில் நிகழ்வைத் தொடங்கி வைத்து கவிஞர் நந்தலாலா அவர்கள் பேசியதாவது, பொதுவாக இன்றைய சூழல், இளைய தலைமுறையினரை நவீன தொழில்நுட்ப சாதனங்களில் சிறைப்படுத்தி வைத்து, புத்தக வாசிப்பின் அருமை உணராது செய்துவிடுகிறது. நாளேடு எடுத்துப் படிக்கவும்கூட அதிக ஆர்வமற்று நேரமற்று போன, ஆன்ராய்ட் உலகத்தில் பல்வேறு தகவல்களை இணையத்தில் மட்டுமே படிக்கும் முதல் தலைமுறை உருவாகிவிட்டது. குடும்பங்களில், பொதுவெளியில் உரையாடல் அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், தமக்குப் பிடித்த புத்தகத்தைத் தொட்டு எடுத்து வாசிக்கும் பழக்கமும் இளம் வயதில் வாய்க்கப் பெறுவது நமது சொந்த செயல்பாடுகளின் துவக்கப் படியாக மாறும். சுயமதிப்பைக் கூட்டும். சிந்தனைத் திறன், படைப்பாற்றல், கூரிய நோக்கு, தெளிவான பார்வை, பொறுமையோடு அணுகும் தன்மை... என எத்தனையோ நலன்கள் புத்தக வாசிப்பின் வாயிலாக கிடைக்கும். தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் வாசிப்போடு கூர்ந்து பார்க்க உதவிடும். வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்! தமிழும் அறிவு வளமும் பெருகட்டும்! நம்பிக்கை அருவியை ஓயாது அடையாளப்படுத்தி உள்ளத்தைக் குளிரவைக்கும் செய்திகளை இத்தகு வாசிப்பு இயக்கங்கள் சமூகத்திற்கு வழங்கும் வண்ணம் செயல்படவேண்டும்... என்றார். பள்ளி மாணவர்கள் முன்னெடுத்த வாசிப்பு இயக்க நிகழ்வு பற்றி பள்ளி இணைச் செயலர் B. சத்யமூர்த்தி அவர்கள் கூறியதாவது, ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என பள்ளி அளவில் வாசிப்பை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் மாற்றுக்கல்வி சிந்தனைகளை முன்வைத்து சமயபுரம் எஸ்.ஆர்.வி. கல்வி நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தளத்தில், பள்ளி வளாகத்தைத் கடந்து பொதுவில் செயல்படவேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தே ‘திருச்சியே வாசி’ எனும் வாசிப்பு இயக்கத்தை பள்ளி மாணவர்கள் இணைந்து முன்னெடுக்கிறோம். புத்தக வாசிப்பு என்பது நம்மை மேம்படுத்தி நம்மைச் சார்ந்தவர்களையும் மேம்படுத்தும். வாசிப்பு என்பது நல்ல பழக்கம் என்பது மட்டுமல்ல, மன நலத்தையும் வழங்க வல்லது. தனிநபர்களின் மனநலனே இந்த சமூக நலன் என்ற அடிப்படையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் வாசிப்பு இயக்க விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி, வாசிப்பு பழக்கத்தை தூண்டும் துண்டறிக்கைகள் மற்றும் தமிழின் புகழ்பெற்ற பத்து எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய ‘திருச்சியே வாசி’ என்னும் சிறு கையேட்டை பொதுமக்களிடையே வழங்கிடும் செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். இத்தகைய செயல்பாடுகள் மூலமாக, ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறைக்கு வெளியே வந்து புதிய பாடங்களை கற்றுக் கொள்கின்றனர். பொதுமக்களிடையே வாசிப்பு பண்பாட்டை உருவாக்கிடும் சமூகப் பணியை, பங்களிப்பை பள்ளி மாணவர்கள் வாயிலாக தொடர்ந்து உருவாக்கிட இருப்பதாக தெரிவித்தார். சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட, ‘திருச்சியே வாசி’ நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் A. ராமசாமி, துணைத் தலைவர் M. குமரவேல் செயலாளர் P. சுவாமிநாதன், பொருளா் S. செல்வராஜன், இணைச் செயலாளர் B. சத்யமூர்த்தி, முதல்வர். க. துளசிதாசன் ஆகியோர் செய்திருந்தனர். மாணவ மாணவியர் ஆசிரியர்கள் என 600 பேர் கலந்து கொண்டனர்.

Login


Visitors Counter