fep2017

FEP - 2017

வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பிரவேசிக்கும் ஆசிரியர்கள், அவர்கள் உலகின் அன்பான நாயகர்களாய் நாயகிகளாய் குழந்தைகள் பின்பற்றும் தலைவர்களாய் இருத்தல் அவசியம் அல்லவா? நம் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைத் திறன்கள் பயிற்சி, மென் திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்குகள் என மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் நடத்தி வருகிறோம். “கனவு ஆசிரியரை நோக்கி” பயணிக்கும் நம் பாதையில் நல்ல சமூகத்தை உருவாக்கும் பணியில் ஆசிரியர்களின் பங்கே மகத்தானவை, இந்த ஆசிரியர்களுக்கான நான்கு நாள் பயிற்சிப் பட்டறையில், ஆசிரியர்கள் தங்கள் திறனை கூர்தீட்டி கொள்ளும் நோக்கில் “கனவு ஆசிரியரை நோக்கி” எனும் நான்கு நாள் பயிலரங்கினை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் திருமிகு. வசந்தி தேவி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தலைமையேற்றார் செயலா் P. சுவாமிநாதன், வாழ்த்துரை வழங்கினார் பொருளாளா் S. செல்வராஜன், இணை செயலா் B. சத்யமூா்த்தி, முதல்வா் க. துளசிதாசன் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். கல்வியாளர் திருமிகு. வசந்தி தேவி அவர்கள் பேசியதாவது, பரந்து விரிந்த உலகில் எத்தனையோ துறைகள் / வாய்ப்புக்கள் என கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் மாணவர்கள் தங்கள் கனவுகளை மருத்துவம், பொறியியல் என்று மட்டும் சுருக்கி கொண்டிருக்கிறார்கள். எந்த குழந்தையைக் கேட்டாலும் நான் மருத்துவராவேன் என்று சொல்லும்படியாக அவா்களை நாம் வளா்க்கிறோம். இந்த ஆண்டு மருத்துவ பொது நுழைவு தேர்வை இந்தியா முழுவதும் 12 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள். சில ஆயிரங்களே உள்ள மருத்துவ கல்லூரி இடங்களுக்கு, எப்படி இத்தனை லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்? எப்படி இத்தனை லட்சம் பேர் கனவு ஒன்றை நோக்கியே அமைந்தது? என்ற கேள்விகளை நம் முன் எடுத்துவைத்தார்கள். இன்று உலகம் விரிந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம் குழந்தைகள் தோ்ந்தெடுப்பதற்கான பாடம் கல்வி முறையில் குறைந்துக் கொண்டே வருகிறது. அப்படியென்றால் அவா்களுடைய ஆயிரம் ஆயிரம் கனவுகளை சிதைப்பவா்களாக நாமே இருக்கிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பாதை தனிக் கனவு என குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கனவுகளை நிறைவேற்றுவதில் துணிவு, தெளிவு, ஆற்றல் இருப்பவராக ஆசிரியா்கள் விளங்கவேண்டும். பரந்த உலகில் அவர்களுக்கு இருக்கும் பலதரப்பட்ட வாய்ப்புக்களை எடுத்துக் கூறி, ஆசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். குழந்தைகளின் கனவுகளை சிதைக்காமல் இருப்பவரே கனவு ஆசிரியர் என்றும் தம் முதிர்ந்த கல்வி அனுபவங்களை நம்மிடையே எடுத்துரைத்தார். ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட திறமைகளை ஆசிரியா்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். கல்வி கற்பதில் மாணவா்களுக்கு முழு சுதந்திரம் இருக்கவேண்டும். குழந்தைகள் கேள்வி கேட்டுகொண்டே இருப்பவா்களாகவும் ஆசிரியா்கள் தெடா்ந்து வாசிப்பவா்களாகவும் இருக்கவேண்டும். அதுவே சிறந்த கல்வி முறை என்றார் கல்வியாளா் வசந்திதேவி. தண்ணீர் தான் 21-ஆம் நூற்றாண்டை தீர்மானிக்கும் என்று ஒற்றை குரலாய் மேடையில் ஒலிக்கத் தொடங்கியது பூவுலகின் சுந்தரராஜன் : இயற்கை – நீர் – நீளும் அபாயங்கள் என்ற தலைப்பில், சுற்றுசூழல் செயற்பாட்டளர், பூவுலகின் நண்பர்கள் திருமிகு. சுந்தர்ராஜன் பேசியதாவது, தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 1500 மீ.மீ மழை பொழிகிறது இருந்தும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்துகிறோம். இது தான் நமது இன்றைய நீர் மேலாண்மையின் அவல நிலை. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் தண்ணீர் விற்பனை பொருளாக பார்க்கப்படுகிறது. நீர் நிலைகள் பராமரிப்பும், மழை நீர் சேகரிப்பும் இன்றைய அவசிய தேவை. ஒவ்வொருவருக்கும் சூழல் குறித்த அடிப்படை அறிவியல் புரிதல் வேண்டும். வளங்குன்றா வளர்ச்சி சார்ந்த நம் தொன்மையான தற்சார்பு வாழ்வியலை மீட்டெடுக்கவேண்டும் என்று விழிப்புணர்வு தந்து சென்றது அந்தக் குரல். மனிதகுலம் தோன்றி வளர்ந்த நீண்ட நெடிய பாதையில் சாதி வந்து கலந்த வரலாற்றினை ஓர் ஆய்வாளனை போல், ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருமிகு ஆதவன் தீட்சண்யா... அம்பேத்கார், பெரியார் தொடங்கி பலரும், சாதியை கைவிடுங்கள் என்று நீண்ட நெடிய பிரச்சாரங்களை எடுத்துரைத்தன் விளைவாக, இன்று நாம் சாதியை எப்படி ஒழிப்பது என்ற சிந்திக்க தொடங்கி இருக்கின்றோம். சாதி என்பது கடக்க முடியாத தடையோ, பௌதிக உணர்வோ இல்லை. சாதி அடையாளம் எதற்கு என இடைவிடாமல் நமக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் சாதிகளை கைவிட முடியும். சாதியை கடந்து நமக்குள் மாற்று உறவுகளை உருவாக்கி கொள்ளும் வகையிலான, ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும். அப்போது தான் எதிர்கால சமூகம் சாதிக்கு பிறந்த சமூகங்களாய் இல்லாமல் சாதிக்க பிறந்த சமூகமாக மலரும் என்று அவர் பேசி முடித்தவுடன் ஆசிரியர்களிடமிருத்து ஏராளமான கேள்விகள் எழுந்தன... . மனித உரிமை செயற்பாட்டாளர் திருமிகு. எவிடென்ஸ் கதிர் சமத்துவ உரிமை, மாண்பு உரிமை, வாழ்வு உரிமை, சுதந்திர உரிமை என மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுதெல்லாம், அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்கள் சாமானிய மக்களாகவே இருக்கின்றனர். சில நேரங்களில் தான் எதிர் கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாத சாமானிய மக்களிடம் இருந்தே பெற்றிடுவதாகவும் குறிப்பிட்டார். இன்றைய சூழலில், சட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் குறித்து கேள்வி கேட்க தொடங்கினாலேயே அன்றி நமக்கான உரிமைகளை பெற முடியாது என்றார். குழந்தைகளின் உளவியலை புரிந்து கொள்வது எப்படி என்ற தலைப்பில், வாழ்க்கைத் திறன்கள் பயிற்றுனர் திருமிகு. பத்மாவதி, மருத்துவர். அமுதா ஹரி, பயிற்றுனர் திருமிகு. விஜயா அவர்களும் ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறியதாவது, நம் நம்பிக்கை மற்றவர்களுடைய சிந்தனையை உரிமையை சிதைக்கக்கூடாது. அக்குழந்தை தனது வளர்ச்சியின் போது சந்திக்கின்ற சவால்கள், பெறுகின்ற எண்ணற்ற திறன்கள், அத்திறன்களை அளவிடும் முறைகள், என ஒரு குழந்தை எவ்வாறு சமூகத்துடன் பொருந்தி போகிறது என்பதையும் ஆராயும் முறையே குழந்தைகள் உளவியல். குழந்தைகளின் உளவியலை, மருத்துவ ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் குழந்தைகளின் சூழ்நிலை அறிந்து, அவர்கள் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதும் கரம் பற்றி வழி நடத்துவது தான் ஆசிரியர்களின் தலையாய கடமை என்றும் முன் தீர்மானங்களுடன் குழந்தைகளை அணுகாதீர்கள் என்றும் குறிப்பிட்டார்கள். ஊடகங்கள் இன்று : எழுத்தாளர் ஞாநி அவர்கள், ஊடகங்களின் இன்றைய நிலை குறித்து கூறியதாவது, பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்று கடந்த 45 ஆண்டுகளாக, பல்வேறு ஊடகங்களில் பணிபுரிந்து வருகின்றேன். தொடர்ந்து ஊடகங்களின் தரமும் பார்வையாளர்களின் விருப்பங்களும் மாறிக்கொண்டே இருப்பதையும், கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றில் ஊடகங்களின் நுண் அரசியலையும் அவை பார்வையாளர்களின் சிந்தனையில் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புக்களையும், தம் 45 ஆண்டுகால ஊடக அனுபவத்தின் வழியாக பேசினார். ஆசிரியர்கள் மாணவர்கள் என நாம் அனைவரும் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டு, தனி மனித மதிபீப்பிடுகள் பாதிக்காத வகையில், ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை உருவாக்கி கொள்ளவேண்டும் என்றார். எழுத்தாளர் திருமிகு. ச. தமிழ்ச்செல்வன் அவர்கள், நம் கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் பன்னாட்டளவில் இன்றைய கல்வி சூழல் குறித்த பகிர்வுகளும் அறிவொளி காலக்கட்டங்களில், பணியாற்றிய அனுபவங்களையும், ஆசிரியர்களிடம் கூறினார். பயிலரங்கில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள், அறிமுகப்படுத்தி பேசிய / காட்டிய “Where to Invade Next” – ஆங்கிலப் திரைப்படத்தை பார்த்தோம். உலகெங்கும் போரை வழிநடத்தியே சென்ற அமெரிக்கர்களின் புதியதான தேடல் என்ற பாணியில் படம் செல்கின்றது. பல்வேறு நாடுகளுக்கும் பயணிக்கும் படம், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் சிறப்பியல்புகளை அப்படியே அமெரிக்காவிற்கும் எடுத்து செல்வது போன்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் சார்பாக பயணிக்கும் நபரின் பேச்சு மொழியை விட உடல் மொழி நம்மை வசீகரிக்கிறது. மனுசன் படம் முழுவதும் நம்மை மெல்லிய புன்னகையுடன் இருக்க செய்கிறார். சமூகத்துடன் அவருக்கிருந்த அனுபவங்களை வெளிப்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் நான்கு நாள் நிகழ்வுகளிலும் உடனிருந்து, கவிதை, கதை, மனதை தொட்ட செய்திகள் எனவும், நேற்றைய நினைவுகளின் வழியாக ஆசிரியர்களுடன் உரையாடி, ஆசிரியர் மன உணர்வுகளை வெளிக்கொணர வைத்தார். ஆளுமைத்தன்மை உடையவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும் : பயிலரங்கின் நிறைவு விழாவில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர். G. அறிவொளி அவர்கள் நிகழ்வில், உரையாற்றினார். ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமிக்கு வரும் பொழுது, ஒரு செய்தியோடு, ஒரு நோக்கத்தோடு தான் வருகின்றது. அந்த குழந்தைகள் தங்கள் கனவுகளை நோக்கி அழைத்து செல்வதில், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம பங்கு இருகின்றது. பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் சூழலில், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதில் போதுமான நேரமின்மையே இருகின்றது. ஆதலால், ஆசிரியர்கள் குழந்தைகளை நெறிப்படுத்துவதில் பெரும் சவால் இருகின்றது. குழந்தைகளின் கனவுகளின் கரம்பற்றி நடந்திடுவதில் ஆசிரியர்களின் பங்கே இன்றியமையாதது. ஆசிரியர்கள் ஆய்வு மனப்பான்மையுடன் கல்வி முறையை உருவாக்க வேண்டும். ஆளுமைத்தன்மை உடையவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும் உருவாக்குதல் வேண்டும் என்றார். நிறைவாக நிகழ்ச்சி குறித்து, ஆசிரியர்கள் கூறிய கருத்துக்கள், பாடப் புத்தகங்களை தாண்டி இந்த சமூகத்தில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வுக்கு வந்திருந்த ஆளுமைகளின் பேச்சு இருந்தது. மாணவர்கள் மத்தியில், சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் குறித்தும் ஆரோக்கியமான சிறு விவாதங்களையும் நடத்தி வகுப்பறை பாடங்களை தாண்டி இந்த சமூகத்தை உள்வாங்கி கொள்ள செய்யமுடியும் என்றனர்.

Login


Visitors Counter