BOOKFAIR2017

புத்தகக் கண்காட்சி 2017

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில், வீட்டுக்கொரு நூலகம் என்னும் முழக்கத்துடன், பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது புத்தகத் திருவிழா. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இருபதாயிரம் பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர். சென்ற ஆண்டு பத்து லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நவம்பர் 23 முதல் 26 வரை நான்கு நாட்களாக நடைபெறுகிறது. பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம், விகடன், ஞானபாநு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், திருச்சி புக் ஹவுஸ், NBT, SRV தமிழ்ப் பதிப்பகம், கிழக்கு பதிப்பக ஒருங்கிணைப்பில், காலச்சுவடு, தமிழ் இந்து, எதிர் வெளியீடு, க்ரியா, சந்தியா, நற்றிணை உட்பட நாற்பது பதிப்பகங்கள்; நாலாயிரம் தலைப்புக்கள் என ஒரு லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பன்னிரண்டு லட்சம் ரூபாய்க்கான புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியின் முதல் நாளான 23/11/2017 – வியாழக்கிழமை புத்தகத் கண்காட்சியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. M. ராமகிருட்டிணன் அவர்கள் திறந்து வைத்து பேசியதாவது, பாவேந்தர் பாரதிதாசனார் ஒவ்வொரு ஊருக்கு ஒரு நூலகம் என்றார். அவரது எண்ணம் தற்சமயம் நிறைவேறிவருகிறது. அதுபோல், வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா. அவர் செல்லுமிடங்களில் எல்லாம் புத்தக வாசிப்பு வழக்கத்தை வலியுறுத்துவார். வீட்டுக்கு ஒரு பூஜை அறை இருப்பது போல நூலகம் இருக்க வேண்டும். நாம் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யும் பொழுது, அந்த ஊரின் நினைவாக ஏதேனும் பொருள்களை வாங்கி வருவது போல, புத்தகம் வாங்குதல் வேண்டும். 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியும், அச்சு உலகில் மாற்றங்களும், கல்வி வளர்ச்சியும் மனித சமூகத்திற்கு ஆகப் பெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தந்தன. இதிகாச கதைகள், பொதுவுடைமைத் தத்துவங்கள், கணிதம், அறிவியல், வரலாறு என உலகெங்கும் கோடிக்கணக்கில் புத்தகங்கள் எனும் அருட்கொடை மனித சமூகம் விழிப்படையவும், வளர்ச்சியடையவும் உதவியது. மாணவர்கள் இணையம், ஊடகம் போன்றவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; அதற்கு அடிமை ஆகிவிடக் கூடாது. நிர்பந்தங்களால் கற்றுக் கொள்வதைவிட, மாணவர்கள் இயல்பாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வாசிக்க கற்றுக் கொள்வதனால் ஒருவரின், சிந்தனை அறிவு விரிவடையும். படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், புத்தகங்கள் நம்மை நல்வழிப்படுத்தும். ஒரே புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்கும் போது புதிய புதிய பொருளும் புரிதலும் கிடைக்கும். உங்களை நம்பி நீங்களே வாசிப்புக் களத்தில் இறங்கினால், நாம் சென்று வராத இடங்களின் வாழ்வியலை பண்பாட்டை, கலை வடிவத்தை நாம் புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக அறியலாம். எந்த நாடும் எந்த மக்களும் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆண்டாண்டு காலமாக ஏற்றுக் கொண்ட, பழக்கத்திலிருந்து உடனடி மாற்றம் நிகழாது. ஒவ்வொருவரும், நல்ல நூல்களை வாசித்து ஆறாவது அறிவை விருத்தி செய்யவேண்டும். அப்பொழுது தான், ‘மரபு வயப்பட்ட புதுமையான மறுமலர்ச்சி’ உண்டாகும் என்றார். புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் கை வண்ணத்தில் உருவான ஓவிய கண்காட்சி அரங்கையும் திறந்து வைத்து பார்வையிட்டார். புத்தகக் கண்காட்சி துவக்க விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. M. ராமகிருட்டிணன் அவர்கள், SRV பள்ளி பொருளர் S. செல்வராஜன், இணைச் செயலர் B. சத்யமூர்த்தி, முதல்வர் க. துளசிதாசன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Login


Visitors Counter