Latest NewsHARVEST - 2016

சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும். திருச்சி,ஜூலை 15: சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும் என்றார் தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநரும் மற்றும் அரசு செயலருமான த.உதயசந்திரன். திருச்சிமாவட்டம்,சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற அறுவடை 2016- விருதுகள்வழங்கும் விழாவில் பங்கேற்று, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, மேலும் அவர் பேசியது: பள்ளி மாணவர்கள் மதிப்பெண்களை மட்டும் பெரிதாக நினைக்காமல் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். படிப்பதுடன் நின்றுவிடாமல் சமூகப்பார்வையுடன் உடையவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்.பெண்கள் சட்டத்தின் ஆட்சியை, வலிமையை நிலைநிறுத்த முன்வர வேண்டும். சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பைத் தொடங்கியுள்ள நீங்கள், உங்களின் கனவுகள் மெய்ப்பட சிலவற்றை கடைப்பிடித்தாகவேண்டும். ஒழுக்கத்தை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கக்கூடாது. பெற்றோர்களும் தாங்கள் விரும்பியதைதான் தங்கள் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று எண்ணாமல், அவர்களின் விருப்பத்துக்கேற்ப விட்டுவிடுங்கள். தங்கள்குழந்தைகளை தோழர்களாகப் பாருங்கள், அப்போதுதான் உங்களின் கனவுகளையும், உங்களின் குழந்தைகளின் கனவுகளையும் நிறைவேற்ற முடியும் என்றார் உதயசந்திரன். இந்த விழாவில், எஸ்.ஆர்.வி. பள்ளியில் பயின்று, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும், கல்விச் செலவுகளுக்கு நிதி இல்லாமல் தவித்தமாணவர் பி.கோகுலநாதனுக்கு ரூ.1.08 லட்சம் உதவித் தொகையையும் உதயசந்திரன் வழங்கினார். விழாவுக்கு பள்ளித் தலைவர் ஏ.ராமசாமி தலைமைவகித்தார். துணைத் தலைவர் எம்.குமரவேல்,இணைச்செயலர் பி.சத்யமூர்த்தி முன்னிலைவகித்தனர். பள்ளிப் பொருளாளர் எஸ்.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் க.துளசிதாசன் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையை வழங்கினார். மாணவிகள் எஸ்.சுருதி,சி.விதுலா, எம்.நுஸ்ஹத்கானம், ஏ.அப்துல்சாரூக் ஆகியோர் தங்களின் அனுபவ உரையை வழங்கினர். முன்னதாக, பள்ளிச் செயலர் பி.சுவாமிநாதன் வரவேற்றார். துணைமுதல்வர் டி.பி.எஸ்.ராஜ்குமார் நன்றி கூறினார்.


திசைகாட்டி 2016

மருத்துவம் பொறியியல் இந்த இரண்டை தாண்டி உலகம் எவ்வளவு பெரியது என்பதை மிக விஸ்தீரனமாக சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கமாக திசைகாட்டி 2016 என்ற பெயரில் ஒரு புதிய எழுச்சி மிகுந்த நிகழ்ச்சியை நடத்தியது. சுமாராக 4000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒரு பிரம்மாண்டமான மாநாட்டு பந்தலில் நடைபெற்றது. 80க்கும் மேற்பட்ட துறைகள் குறித்தும் பட்டப்படிப்புகள் குறித்தும், பட்ட மேற்படிப்புகள் குறித்தும் மிகவிரிவாக எடுத்துச்சொல்லப்பட்டது. அரங்கத்திலிருந்து அத்துனை பேரும் பார்த்து, கேட்டு புரியும் வண்ணமாக அரங்கம் முழுக்க எல் இ டி திரைகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. சென்னையிலிருந்து இத்துறை நிபுணர் திரு.நெடுஞ்செழியன் மிகவிரிவாக மேற்படிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கலை, இலக்கியம், அறிவியல், கணிதம், பொறியியல், வணிகவியல், மருத்துவம், மேலாண்மை, தொழில்நுட்ப கழகங்கள், சட்டம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தணிக்கைவியல், நிர்வாகவியல் மற்றும் பல்வேறு படிப்புகள் குறித்தும் அது சார்ந்த கல்வி நிறுவனங்கள் குறித்தும் எடுத்துச்சொன்னதோடு நுழைவுத்தேர்வு சம்மந்தபட்ட விஷயங்களையும் அழகாக எடுத்துரைத்தார். கல்வி சார்ந்த பல புதிய ஜன்னல்கள் திறக்கப்பட்டன.


DAWN - 2016

2016ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் 04.06.16, 26.06.16 அன்று விடியல் 2016 நடத்தப்பட்டது. பள்ளி வரலாறு, தலைவர்கள், ஆசிரியர்கள், துறைகள் இயங்கும் விதம், மாணவர்களுக்கான நடைமுறைகள், பள்ளி நடைமுறைகள், பள்ளி செயல்பாட்டு திட்டங்கள், பள்ளி செயல்படும் விதம், நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகள், பாடத்திட்டம், தேர்வு முறைகள், பெற்றோர் கூட்டம், பள்ளியில் நடத்தப்படுகிற நிகழ்ச்சிகள், உணவு முறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தவிர்க்க வேண்டியவைகள் இப்படி பல்வேறு நடைமுறைகளை துல்லியமாக பெற்றோர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களின் ஒத்துழைப்பை நாடுகிற நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மே 26 – ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜீன் 4ம் தேதி பதினோறாம் வகுப்பு மாணவர்கள் – பெற்றோர்களுக்கும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பள்ளி வளாகமே திருவிழா களைகட்டியிருந்தது.


துளிர் - 2016

விடுதி மாணவர்களுக்கான சிறப்புத்திட்டம் துளிர். விடு்தியில் தங்கிபடிக்கும் மாணவர்கள் படிப்புத்தாண்டி பல்வேறு விஷயங்களில் அறிவுத்தேடல் மிகுந்தவர்களாக உருவாக்கும் அமைப்பே துளிர். ஞாயிற்றுக்கிழமைகளின் காலை நேரத்தில் துளிர்க்கும் இந்த நிகழ்வு மாணர்வகளை மனதைப் பதப்படுத்தி மெல்ல கைவிரல் பிடித்து மேலேற்றும் பணியைச் செய்துவருகிறது. பொதுஅறிவு குறித்த விவாதம் பேச்சு மற்றும் எழுத்துக்கலையில் பயிற்சி தலைமைப்பண்பு வாழ்க்கைத்திறன்கள் சினிமா புரிதல் ஊடக அரசியல் இயற்கை வரலாறு கிராமம் நோக்கி – சோஷியல் மேப்பிங் என பல்வேறு தளங்களில் துளிர் இயங்குகிறது. இதனுடைய துவக்க விழா கடந்த 23.07.16 சனிக்கிழமை பேரா.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மிக இயல்பாக நிகழ்ச்சியை நடத்தி தொடர்பு கொள்ளுதலின் முக்கியத்துவத்தை ஒரு டெமோ மூலம் மிக அழகாக விளக்கி புரியவைத்தார் பேரா.ஜி.பா.


MATHS LAB

நம் கனவுத்திட்டம் - கணித ஆய்வகம் வகுப்பு ஒன்று முதல் ஐந்து வரை ஒரு ஜீனியர் (Junior) கணித ஆய்வகமும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கான சீனியர் (Senior) கணித ஆய்வகமும் அழகாக வடிவமைக்கப்பட்டு மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எழில் மிகுந்த தோற்றத்துடனும் வண்ண மயமான வடிவமைப்புடனும் கணித ஆய்வகம் மிளிர்கிறது. மிக நவீனமான கணித கற்றல் மேம்பாட்டுத்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக பல புதிய உபகரணங்கள், காரணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடும் குதூகலத்தோடும் கணித ஆய்வகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியைத் தருகிற செய்தியாகும். கணித ஆசிரியர்கள் அத்துனை பேருக்கும் ஒரு கூர்நோக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சிறந்த கணித மாணவர்களை உருவாக்குவதே நம் லட்சியம். திரு.த.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் திருக்கரங்களால் கணித ஆய்வகம் திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கணித பயிற்சிப் பட்டறை

அகில இந்திய கணித ஆசிரியர்கள் சங்கம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கான கணித ஒலிம்பியாட் பயிற்சிப் பட்டறை நடத்திவருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் நமது பள்ளியிலிருந்து 25 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் ஆர்.புவனேஸ்வரி மற்றும் எஸ்.உமா மகேஸ்வரி பொறுப்பேற்று மாணவர்களை அழைத்துச் சென்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற இம்முகாமில் கணிதம் குறித்த புதிய சிந்தனை, வழக்கமான முறையிலிருந்து மாற்று வழியிலான தீர்வு காணும் முயற்சிகள் என பல விசயங்கள் கற்றுத்தரப்பட்டன. ஒலிம்பியாட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார் செய்துகொள்வது என்பது குறித்த முன்னோட்டமாகவும் அமைந்தது.


வண்ணத்துப்பூச்சகளின் உலகம்

வண்ணத்துப்பூச்சிகளின் உலகத்து ஆசிரியர்களுக்கு சென்னையிலிருந்து குழந்தைகளை கையாளும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்.மாலதி அவர்கள் கலந்து கொண்டு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளித்தார். குழந்தைகளின் திறன்களை மதிப்பிடுதல், குழந்தைகளைப் புரிந்துகொள்ளுதல், குழந்தைகளின் உலகத்திற்குள் பயணம் செய்தல் என பல்வேறு விஷயங்களை முனைவர். மாலதி கற்றல் நடவடிக்கையாகவும் செயல்பாட்டு முறையாகவும் விளக்கிச்சொன்னது ஒரு அழகான நிகழ்வு.


முதுநிலை ஆசிரியர்களுக்கான பாடப்பயிற்சி

கணிதம், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியர்களுக்குப் பாடத்திட்டத்தை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் எப்படி கற்பிப்பது என்பது குறித்து ஒரு வார கூராய்வு பயிற்சித் திட்டம் நடைபெற்றது. பேரா.சூர்யகுமார், முனைவர்.சித்ரா நடராஜன், பேரா.கே.எஸ்.பாலாஜி, பேரா.திருவேங்கடம் ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். ஒவ்வொரு பாடத்தையும் மிக ஆழமான விரிவான அலசல் பார்வையோடு எப்படி அணுகவேண்டும் அவற்றிலிருந்து மாணவர்கள் சிந்திக்க பழக வேண்டும். எத்துனை கடினமான வினாத்தாளாக இருந்தாலும் அதை தர்க்கரீதியாக எப்படி எதிர்கொள்வது? விடைஅளிப்பது என்பது குறித்தெல்லாம் புதிய கோணத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான இந்த புத்தாக்கப்பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக ஆசிரியர்கள் சிலாகித்தது பயிற்சியின் வெற்றியாகும். இது பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம் முழுமையும் நடத்தித்தரும் வகையில் திட்டமிடப்பட்டு ஆண்டு முழுக்க நடைபெற உள்ளது.

Visitors Counter